(1882 – 1921)

இன்று பாரதியார் பிறந்தநாள். அவர் இருக்கும்போது யாரும் அவரையோ, அவர் கவி உள்ளத்தையோ கொண்டாடவில்லை. வறுமையில் தான் தவிக்க விட்டார்கள். கிட்டத் தட்ட பத்து வருஷங்களுக்கு மேல் பிரஞ்சு நாட்டுப் பகுதியான புதுச்சேரியில் வாழ்க்கை நடத்திவிட்டுப் பின்னர், மனைவியும், குழந்தைகளும் கடையம் சென்ற பின்னர், தனியாகப் புதுச்சேரி வாசம் சலித்துப் போய் அவரும் இந்தியப்பகுதியான கடலூருக்கு வந்த போது அவரை ஆங்கில அரசு கைது செய்து ரிமாண்டில் வைக்கிறது. உடனே கடையம் போயாகவேண்டும். ஆனால் அவரை நிர்ப்பந்திக்கும் அரசு ஒரு பக்கம், மறுபக்கம் குடும்பச் சூழல் எனத் தவிக்கின்றார். முடிவில் ஆங்கில அரசு கடையத்தை விட்டு வரக் கூடாது என்று சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டு வெளியே வந்து கடையம் செல்கின்றார். பாரதியின் உணர்ச்சி செறிந்த கவிதைகளுக்கு ஆங்கில அரசு அவ்வளவு கவலைப்பட்டதோடு அல்லாமல், கிரிமினல் குற்றவாளி போலவும் நடத்தியது. பாரதியின் “இந்தியா” பத்திரிகையையே தடை செய்தவர்கள் அல்லவா!

கடையம் சென்ற பாரதி, சாப்பாட்டுக்கு வழியில்லாமல் எட்டயபுரம், திருவனந்தபுரம், கானாடுகாத்தான், காரைக்குடி போன்ற ஊர்களில் உதவி தேடுகின்றார். எட்டயபுரம் அரசருக்குச் சீட்டுக்கவிகள் அனுப்புகின்றார். நோபல் பரிசுக்காகத் தன் கவிதைகளை அனுப்பவும் விருப்பப்படுகின்றார். வறுமை காரணமாக எதுவுமே நடக்கவில்லை. பாரதி இந்த
மாதிரிக் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த சமயம் தான் மதுரையில் டவுன்ஹாலில் நோபல்
பரிசு பெற்ற தாகூருக்குப் பாராட்டு விழாவும், வரவேற்பும் நடைபெற்றது. 1913-ல் நோபல்
பரிசு வாங்கிய தாகூருக்கு கிட்டத் தட்ட ஆறு வருடங்கள் கழித்துப் பாராட்டு விழா எடுத்த தமிழர்களில் யாருமே பாரதி சோற்றுக்குக் கஷ்டப் பட்டுக் கொண்டிருப்பதை நினைவு கூரவில்லை. தன்னுடைய 11-ம் வயதில் பாரதிக்குக் கிடைத்த பட்டம் “பாரதி” என்பது. அதன் பின்னர் உயிர் உள்ளவரை எந்தப் பட்டமும் யாரும் பாரதிக்கு அளிக்கவில்லை.

1919 மார்ச்சுக்குப் பின்னர் மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் பிடிகளைத்
தளர்த்திக் கொள்கிறது ஆங்கில அரசு. அதன் பேரில் ஊரை விட்டுக் கிளம்பி சென்னை வருகின்றார். இந்தச் சமயம் தான் காந்திஜியின் தென்னாட்டு விஜயம் நடைபெற்றதால் ராஜாஜியின் வீட்டில் காந்தியுடன் சந்திப்பு நடைபெறுகிறது. என்றாலும் வாழ வழி எதுவும் கிடைக்காததால் மறுபடி கடையம் செல்கின்றார். பல முயற்சிகளுக்குப் பின்னர் 1920 டிசம்பரில் தான் சுதேசமித்திரன் பத்திரிகையில் வேலை கிடைத்துச் சென்னை வருகிறார். என்றாலும் அவர் அதன் பின்னர் 7,8 மாதங்கள் தான் உயிர் வாழ்ந்தார். செப்டம்பரில் 12-ம் தேதி தன்னுடைய 39-ம் வயது நடக்கையிலேயே உயிர் துறக்கிறார். இந்த வயதுக்குள்ளேயே அவர் கண்ட கனவுகள், எழுத்து வடிவம் பெற்று விட்டிருந்தாலும் பாரதியை ஒரு கவி என்றே பின்னர் பல வருஷங்களுக்குப் பின்னர் தான் ஒப்புக் கொள்ளப் பட்டிருப்பது துயரமான விஷயம். பாரதி யுகம் என்பது பாரதியோடு முடியவில்லை. இன்னும் தொடரும், ஏனெனில் பாரதியின் கனவுகள் எதுவும் நனவாகவில்லை.

If you would like to read about Mahakavi Bharathiyar’s life story in English, click on this link:

http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathi

Prad.